ஓட்டப்பிடாரம் அருகே துணிகரம்;கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை கொள்ளை
ஓட்டப்பிடாரம் அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே கோவிலில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பழமைவாய்ந்த கோவில்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மருதன்வாழ்வு கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த கோவிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர்.
கடந்த 4-ந்தேதி ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி கோவிலில் பொதுமக்கள் சார்பில், பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்பட்டது. பின்னர் கோவிலை பூசாரி தர்மராஜ் பூட்டிச் சென்றார்.
பூட்டை உடைத்து...
நேற்று வழக்கம்போல் கோவிலுக்கு பூசாரி தர்மராஜ் சென்றார். அப்போது கோவிலின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், கோவில் கருவறையில் இருந்த சுமார் 1½ அடி உயர ஐம்பொன்னாலான காமாட்சி அம்மன் சிலை கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து நாரைக்கிணறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
இதில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்த கோவிலில் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஐம்பொன் சிலையை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்து, அங்கிருந்த ஐம்பொன்னாலான அம்மன் சிலையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கோவிலில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சேகரித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கோவிலில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓட்டப்பிடாரம் அருகே கோவிலில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையை மர்மநபர்கள் துணிகரமாக கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.