பெருந்துறை அருகே துணிகரம்:சுவரில் துளை போட்டு நகை கடையில் திருட முயற்சி


பெருந்துறை அருகே துணிகரம்:சுவரில் துளை போட்டு நகை கடையில் திருட முயற்சி
x

பெருந்துறை அருகே சுவரில் துளை போட்டு நகை கடையில் திருட முயற்சி நடந்தது. அப்போது அலாரம் ஒலித்தவுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடியதால் பலலட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பியது.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே சுவரில் துளை போட்டு நகை கடையில் திருட முயற்சி நடந்தது. அப்போது அலாரம் ஒலித்தவுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடியதால் பலலட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பியது.

எச்சரிக்கை மணி ஒலித்தது

பெருந்துறையை சேர்ந்தவர் பரமசிவம். இவர் நால்ரோடு சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு பரமசிவமும், ஊழியர்களும் வீட்டுக்கு வந்து விட்டார்கள்.

இந்தநிலையில் நள்ளிரவில் திடீரென நகைக்கடையின் அலாரம் ஒலித்தது. நகை கடை அமைந்துள்ள நால்ரோடு சந்திப்பில் நள்ளிரவிலும் மக்கள் நடமாட்டம் இருக்கும். அலாரம் சத்தத்தை கேட்டதும், அந்த பகுதி பொதுமக்கள் திரண்டனர். யாரோ நகைக்கடையில் திருடுவதற்கு புகுந்துவிட்டார்கள் என ஓடி வந்தார்கள்.

சுவரில் துளையிட்டு..

பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தபோது மர்ம நபர்கள் யாரையும் காணவில்லை. ஆனால் நகைக்கடையின் பின்பக்க சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளை போடப்பட்டு இருந்தது. இதனால் கொள்ளையர்கள் கடைக்குள் பதுங்கி இருக்கலாம் என்று பொதுமக்கள் பெருந்துறை போலீசாருக்கும். கடையின் உரிமையாளர் பரமசிவத்துக்கும் தகவல் கொடுத்தார்கள்.

இதையடுத்து பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். பின்னர் உரிமையாளர் முன்னிலையில் கடைக்குள் சென்று பார்த்தார்கள். கடைக்குள் மர்ம நபர்கள் யாரும் இல்லை. அதேபோல் கடையில் இருந்த தங்க, வெள்ளி நகைகள் திருட்டு போகாமல் அப்படியே இருந்தன.

தப்பி ஓட்டம்

இதைத்தொடர்ந்து துளை போடப்பட்ட இடத்துக்கு போலீசார் வந்து பார்வையிட்டார்கள். கொள்ளையர்கள் நகைகளை திருடுவதற்காக கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளார்கள். அதன் வழியாக அவர்கள் உள்ளே நுழைந்ததும் கடையில் அமைக்கப்பட்டு இருந்த அலாரம் ஒலித்துள்ளது. அதே நேரம் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்ததால் எங்கே மாட்டிக்கொள்வோம் என்று கொள்ளையில் ஈடுபடாமல் தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது.

இந்தநிலையில் ஈரோட்டில் இருந்து துப்பறியும் மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது துளை போடப்பட்ட இடத்தில் இருந்து அந்த பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோவில் வரை ஓடியது. பின்னர் அங்கிருந்து அக்ரகார வீதி வரை ஓடி நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

நகைகள் தப்பின

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை பிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

அலாரம் ஒலிக்காமல் இருந்திருந்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போயிருக்கும். எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பெருந்துறை நால்ரோடு சந்திப்பில் உள்ள ஒரு நகைக்கடையில் துளைபோட்டு கொள்ளையர்கள் திருட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story