வங்கி ஊழியர், வியாபாரி வீடுகளில் 37 பவுன் நகைகள்-ரூ.1 லட்சம் கொள்ளை: பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
பூட்டை உடைத்து கைவரிசையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வீடுகளில் கொள்ளை
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகர் ஜெயராம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 63). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராமகிருஷ்ணன் (62). அவர், வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார்.
சீனிவாசன் கடந்த 16-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு ராஜபாளையத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்று விட்டார். இதேபோல், ராமகிருஷ்ணனும் தனது மனைவியுடன் கடந்த 19-ந்தேதி தனது சொந்த ஊரான எஸ்.அழகாபுரிக்கு சென்று விட்டார்.
இவர்கள் வெளியூர் சென்றதால் வீடுகள் பூட்டிக் கிடந்தன. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
37¼ பவுன் நகைகள்
இந்த நிலையில் வெளியூர் சென்றிருந்த சீனிவாசன் கடந்த 20-ந்தேதி நள்ளிரவிலும், ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் அதிகாலையிலும் வீடு திரும்பினர். அப்போது அவர்களது வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதில் சீனிவாசன் வீட்டில் 31 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும், ராமகிருஷ்ணன் வீட்டில் 6¼ பவுன் நகைகள், 350 கிராம் வெள்ளி பொருட்களும் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு பழனிசெட்டிபட்டி போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து வீடுகளில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
தனிப்படை
இந்த கொள்ளை சம்பவம் குறித்து சீனிவாசன், ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் தனித் தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தனித்தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியம் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.