தொழிலாளி வீட்டில் துணிகர திருட்டு
தொழிலாளி வீட்டில் துணிகர திருட்டு நடந்துள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை காலனி தெருவை சேர்ந்தவர் தெய்வராஜ்(வயது 45). இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஊருக்கு வந்த இவர் நேற்று உறவினர் ஒருவரது சுபநிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவர்கள் மறைத்து வைத்திருந்த வீட்டு சாவியை எடுத்து வீட்டின் கதவு மற்றும் பீரோவைத் திறந்து அதில் இருந்த 3 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரத்தை பட்டப்பகலில் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அரியலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.