கால்நடை மருத்துவ முகாம்
எரவாஞ்சேரி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரிலும், உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் ஆலோசனையின் பேரிலும் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி துறையூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம் தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர்கள் பெரோஸ் முகமது, முத்துகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர் பிரியதர்ஷினி வரவேற்றார். முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் உதவி மருத்துவர்கள் அருண், சிவப்பிரியா, ஸ்ரீதர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுபேதா ராஜேஸ், கால்நடை ஆய்வாளர் பாரிவேந்தன், ஊராட்சி செயலர் மகேந்திரன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.