ஆபத்தான நிலையில் கால்நடை மருத்துவமனை கட்டிடம்


ஆபத்தான நிலையில் கால்நடை மருத்துவமனை கட்டிடம்
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடை மருத்துவமனை

கூத்தாநல்லூர் அருகே சாத்தனூரில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சாத்தனூர், பழையனூர், நாகங்குடி, காக்கையாடி, கிளியனூர், கானூர், தண்ணீர்குன்னம், அழகியநாதன்கோம்பூர், சோலாட்சி, மாயனூர், புனவாசல், வேற்குடி, அன்னுக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களது வீடுகளில் வளர்த்து வரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சேதமடைந்த கட்டிடம்

இந்த நிலையில், இந்த கால்நடை மருத்துவமனை கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மழை காலங்களில் கட்டிடத்துக்குள் தண்ணீர் கசிந்து உள்ளே வைக்கப்பட்டுள்ள மருந்துகள் சேதம் அடைந்து வருகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால், உறுதி தன்மை இழந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது .

புதிதாக கட்ட வேண்டும்

மேலும், மிகச் சிறிய அளவில் கட்டிடம் உள்ளதால் போதிய வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை இடித்து விட்டு இதே இடத்தில் புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story