பள்ளூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் -ஊராட்சி மன்ற தலைவர் ரா.பிரதாப் தகவல்


பள்ளூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் -ஊராட்சி மன்ற தலைவர் ரா.பிரதாப் தகவல்
x

பள்ளூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர் ரா.பிரதாப் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

பள்ளூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர் ரா.பிரதாப் தெரிவித்தார்.

பள்ளூர் ஊராட்சி கிராமங்கள்

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பள்ளூர், பழைய காலனி, புதிய காலனி, பருவமேடு, ஆலப்பாக்கம், கசத்துமேடு, ஆலப்பாக்கம் மெயின் ரோடு ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக அதே பகுதியை சேர்ந்த ரா.பிரதாப் உள்ளார்.

இவர் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவராக உள்ளார். ஊராட்சியில் செய்யப்பட்டு உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து தலைவர் ரா.பிரதாப் கூறியதாவது:-

பள்ளூர், பழைய காலனியில் ரூ.14 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, ரூ.9 லட்சத்தில் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் புதிய காலனியில் ரூ.14 லட்சத்தில் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாயும் ஆலப்பாக்கத்தில் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்திலும், பழைய காலனியில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்திலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ரெயில்வே பகுதியில் ரூ.32 லட்சத்திலும், ஏ.ஆர்.சுப்பிரமணி நகரில் ரூ.8 லட்சத்திலும், ஆலப்பாக்கத்தில் ரூ.14 லட்சத்திலும் பேவர் பிளாக் ரோடுகள், பள்ளூர், பெருமாள் கோவில் தெருவில் ரூ.7 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

மேலும் பணிகள் தொடக்கம்

புதிய காலனியில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையம், பள்ளூரில் ரூ.30 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. பள்ளூரில் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தில் ஆழ்துளை கிணறு, பள்ளூர் தேரடி தெருவில் ரூ.9 லட்சத்திலும், வராஹி நகரில் ரூ.4 லட்சத்திலும், ஜெய் பாலாஜி நகரில் ரூ.3 லட்சத்திலும் சிமெண்டு சாலைகள் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

ஆலப்பாக்கத்தில் ரூ.6 லட்சத்தில் புதிய குளம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசித்து வந்த 21 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவுடன் வீடு கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு இலவச வீடு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 30 பயனாளிகளுக்கு இலவச வீடு வழங்கப்பட உள்ளது.

ஊராட்சியில் தலா 2 முறை பொது மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டு அதில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

பள்ளூர் ஊராட்சிக்கு புதியதாக கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 3 மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நான் தினமும் அலுவலகம் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அதை உடனுக்குடன் தீர்த்து வைத்து வருகிறேன்.

வார்டு பகுதியில் மக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு முன்பாக அந்த குறையை நான் அறிந்து அதை சரிசெய்து கொடுத்து வருகிறேன். அனைவருக்கும் தங்கு, தடையில்லாமல் குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளில் புதிய குழாய்கள் அமைத்து கொடுத்து உள்ளேன்.

மின் விளக்குகள் இல்லாத பகுதியில் புதிய மின் விளக்குகளும், பழுதடைந்த மின் விளக்குகளை உடனுக்குடன் அகற்றி அந்த பகுதியில் உடனடியாக புதிய மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுத்து உள்ளேன். ஏரிகளுக்கு மழைநீர் தடையில்லாமல் சென்று வர கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளது.

பனை விதைகள்

ஊராட்சியில் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க பனை விதைகள் நடப்பட்டு உள்ளது. கிராமத்தை பசுமையாக மாற்ற மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. மக்களின் அடிப்படை தேவைகளுக்கு அரசு நிதி வர காலதாமதம் ஏற்பட்டால் எனது சொந்த பணத்தை வைத்து அந்த தேவையை உடனுக்குடன் சரிசெய்து கொடுத்து வருகிறேன்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளூர் ஊராட்சியை முதன்மையான சிறந்த ஊராட்சியாக மாற்ற கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு, துணை தலைவர் ச.தீனதயாளன், மாவட்ட கவுன்சிலர் மங்கையர்கரசி சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் பி.சரஸ்வதி பார்த்திபன் ஆகியோரின் ஒத்துழைப்போடு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எம்.அம்சா மாசிலாமணி, வார்டு உறுப்பினர்கள் மலர் கோபி, எம்.பவானி முகிலன், வி.பன்னீர்செல்வம், எஸ்.கந்தவேல், வி.பரந்தாமன், ஏ.சரசு ஆதிமூலம், எல்.அஞ்சலா லோகநாதன், சசிகலா சரவணன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன்.

இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவர் ரா.பிரதாப் தெரிவித்தார்.


Next Story