30 தமிழறிஞர்களுக்கு வி.ஜி.பி. இலக்கிய விருது: சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
சென்னையில் நடந்த வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழாவில், 30 தமிழறிஞர்களுக்கு வி.ஜி.பி. இலக்கிய விருது வழங்கப்பட்டது. விருதுகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
சென்னை,
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழா அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. விழாவுக்கு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமை தாங்கினார். வி.ஜி.பி.ரவிதாஸ் வரவேற்றார்.
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழா மலர் மற்றும் வி.ஜி.பி.ராஜாதாஸ் எழுதிய 'என் தந்தையாரின் அறிவுச் சிந்தனைகள்' என்ற நூலை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.
நூல் வெளியீடு
மார்கிரெட் பாஸ்டின் எழுதிய சிலம்பு என்னும் இசை நாட்டியக் களஞ்சியம் நூலை, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார். முத்துக்குமாரசாமி எழுதிய வ.உ.சிதம்பரனார் நூலை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெளியிட்டார்.
விழாவில் சிறந்த 3 தமிழ்ச் சங்கத்துக்கு விருது வழங்கப்பட்டது. அன்புபாலம் கல்யாண சுந்தரம், பாடகர் வேல்முருகன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்பட 30 தமிழறிஞர்களுக்கு வி.ஜி.பி. இலக்கிய விருது வழங்கப்பட்டது.
செங்கோல்
இந்த விருதுகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், அவ்வை அருள், நாஞ்சில் பீற்றர், மல்லை சத்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, பேசினர்.
விழாவில் வி.ஜி.சந்தோசத்துக்கு கிரீடம் அணிவித்து செங்கோல் வழங்கப்பட்டது. நல உதவிகள் வழங்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
விழா நிறைவில் வி.ஜி.பி.ராஜாதாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை உலகநாயகி பழனி தொகுத்து வழங்கினார்.