விசைத்தறிகள் குறித்த கணக்கெடுப்பு சரியான முறையில் நடைபெற வேண்டும்


விசைத்தறிகள் குறித்த கணக்கெடுப்பு சரியான முறையில் நடைபெற வேண்டும்
x
திருப்பூர்


விசைத்தறிகளில் பேனல் போர்டு பொருத்தப்படுவதால் விசைத்தறிகள் குறித்த கணக்கெடுப்பு சரியான முறையில் நடைபெற வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விசைத்தறிகள் கணக்கெடுப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கைத்தறி மற்றும் விசைத்தறிகள் 'ஜியோ டேக்' எனும் தொழில்நுட்ப உதவியுடன் கணக்கெடுப்பு நடத்தப்படும். எலக்ட்ரானிக் பேனல் போர்டு இல்லாத 4 லட்சம் விசைத்தறிகளில் முதல் கட்டமாக, 5 ஆயிரம் விசைத்தறிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் பேனல் போர்டு அமைக்கப்படும் என்று கைத்தறி துறை மானிய கோரிக்கையின்போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி சங்க தலைவர் வேலுசாமி செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது:-

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.5 லட்சம் விசைத்தறிகள் உள்பட தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து முழுமையான விவரங்கள் இல்லை. தொழில்நுட்ப உதவியுடன் கணக்கெடுப்பு நடத்துவது வரவேற்கத்தக்கது.

சரியான முறையில்

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான கணக்குகளே வழக்கத்தில் உள்ளன. கணக்கெடுப்பை முறையாக நடத்துவதன் மூலம், விசைத்தறிகளின் எண்ணிக்கையை கணக்கு காட்டி அரசு உதவிகளை பெற முடியும். எனவே, கணக்கெடுப்பு சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். இதனால், விசைத்தறி தொழில் சார்ந்து எத்தனை குடும்பங்கள் உள்ளன என்பது தெரியவரும். இதை மையப்படுத்தி மத்திய, மாநில அரசிடம் எங்களது கோரிக்கைகளை வைக்க முடியும்.

இதேபோல 50 சதவீத மானியத்துடன் பேனல் போர்டு அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் 12 ஆயிரம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்கும் என்பதால் பேனல் போர்டு இல்லாத விசைத்தறியாளர்கள் பயன் பெறுவர். திருப்பூர், கோவை மாவட்டங்களில், 75 சதவீத தறிகளில் பேனல் போர்டுகள் உள்ளன. இதனால், துணி உற்பத்தி திறன் அதிகரிப்பதுடன், விசைத்தறி தொழிலில் ஆள் பற்றாக்குறை குறையும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story