கண்காணிப்பு கேமராவில் விபூதி தூவி திருப்பரங்குன்றம் மலை கோவிலில் வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு
கண்காணிப்பு கேமராவில் விபூதி தூவி திருப்பரங்குன்றம் மலை கோவிலில் வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டுபோனது
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விசுவநாதர் கோவில் மற்றும் மலைமேல் குமரர் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானின் தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மாலையில் பூஜையை முடித்துவிட்டு வெளிப்பிரகார கதவில் பூட்டு போட்டு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் மலைமேல் குமரர் சன்னதியில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் இருந்த சுமார் 3 அடி உயரமுள்ள வேல், குத்துவிளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களை திருடி உள்ளனர்.
இந்த நிலையில் காசிவிசுவநாதர் கோவிலில் இருந்த பீரோவை உடைத்துள்ளனர். அதில் இருந்த ஒரு சில பொருட்களையும் திருடி உள்ளனர். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் தங்களை அடையாளம் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் விபூதியை ஊதி மறைத்துள்ளனர். மேலும் அவர்கள் கண்காணிப்பு கேமராவின் பதிவு சேமிக்ககூடிய ஹார்டுடிஸ்க்கையும் திருடி சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசில் கோவில் நிர்வாகம் புகார் செய்துள்ளது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.