கடமலை-மயிலை ஒன்றியக்குழு துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு


கடமலை-மயிலை ஒன்றியக்குழு துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு
x

கடமலை-மயிலை ஒன்றியக்குழு துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தேனி

கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. ஒன்றியக்குழு தலைவராக சித்ரா சுரேஷ் உள்ளார். இதற்கிடையே துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட சில காரணங்களால் அந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்தநிலையில் துணைத்தலைவர் தேர்தல், மயிலாடும்பாறையில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ் உள்பட தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு கவுன்சிலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சேகரன் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சேகரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி தாமரைக்கண்ணன் அறிவித்தார்.

இதையடுத்து ஒன்றியக்குழு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட சேகரனுக்கு ஒன்றிய ஆணையாளர்கள் திருப்பதி முத்து, அய்யப்பன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். துணைத்தலைவர் தேர்தலை முன்னிட்டு கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை போலீசார் ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story