ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி உறுதி


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி உறுதி
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி உறுதியானது என்று தேன்கனிக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி உறுதியானது என்று தேன்கனிக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

அஞ்சலி

கிருஷ்ணகிரி மாவட்டம் இருதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட துணை செயலாளர் செல்வத்தின் மகள்களான தமிழரசி (வயது 19) தமிழ்பிரியா (17), உறவினர் மகனான அம்பேத்வளவன் (14) ஆகிய 3 பேரும் விபத்தில் இறந்தனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று இருதுகோட்டைக்கு வந்து விபத்தில் இறந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். மேலும் இறந்தவர்கனின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி உறுதியான ஒன்று. இவர் குறைந்தப்பட்சம் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் என்ற ஒரே ஒரு சாதகமான அம்சம். மற்றப்படி அந்த கட்சி வலுவான எதிர்க்கட்சியாக கூட களத்தில் இல்லை. வேங்கை வயல் பிரச்சினையில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு புலன் விசாரணை எவ்வாறு நடக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும்.

அரசியல் நடவடிக்கை

பாரதிய ஜனதா கட்சியினர் சாதி, மத உணர்வுகளை துாண்டுவதும் தேசிய தலைவர்களை அவமதிப்பதும் திருவள்ளுவர் போன்ற இலக்கிய ஆளுமைகளை மதம் என்ற பெயரில் அடையாளப்படுத்த முயற்சிப்பதும் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாக உள்ளன. வடமாநிலங்களில் இதுபோன்று காய்களை நகர்த்தி மக்களை சாதி, மதம், கடவுளின் பெயரால் பிளவுப்படுத்தி இந்துக்களுக்கு நாங்களே பாதுகாப்பு என்ற ஒரு மாயையை உருவாக்கி அரசியல் செய்து வருகின்றனர். அதே உக்தியை தமிழகத்திலும் கையாளுகின்றனர். அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதை அரசு வேடிக்கை பார்க்க கூடாது. தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. உயர் மற்றும் உச்சநீதிமன்றங்கள் கூட சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. வருமானவரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவை பாரதிய ஜனதா கட்சியின் ஏவல்களுக்கு வேலை செய்யக்கூடிய துறைகளாக உள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க.வை நான்கு கூறுகளாக உடைத்தது மத்திய அரசு தான். இரட்டை இலை சின்னம் வழக்கில் பழனிசாமிக்கு அணிக்கு ஆதரவான நிலையை மோடி அரசு எடுக்க காரணம் வருகிற நாடாளுமன்ற தேர்தல் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story