தாக்கப்பட்டதாக பரவிய வீடியோ: ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை அசாம் மாநில சிறப்புக்குழு ஆய்வு


தாக்கப்பட்டதாக பரவிய வீடியோ: ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை அசாம் மாநில சிறப்புக்குழு ஆய்வு
x

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை தாக்கப்பட்டதாக பரவிய வீடியோவால் அசாமை சோ்ந்த சிறப்புக்குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு பெண் யானை கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜெயமால்யதா என பெயரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் வைத்து அந்த யானை தாக்கப்பட்டதை தொடர்ந்து, பாகன்கள் 2 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை தாக்கப்படுவதாக தொடர்ந்து வீடியோ மூலம் வதந்தி பரவுகிறது.

தமிழக அரசு குழு

இதற்கிடையே தமிழக அரசு சிறப்பு குழு அமைத்து, யானை தாக்கப்பட்டதா? தற்போது யானையின் நிலைமை என்ன? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில் யானை நலமுடன் இருப்பதாக தமிழக அரசுக்கு அக்குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இந்தநிலையில், அசாமை சேர்ந்த வனப்பாதுகாவலர் அங்குள்ள ஐகோர்ட்டில் யானையை மீண்டும் அசாமிற்கு கொண்டு வர உத்தரவிடவேண்டும் என மனுத்தாக்கல் செய்தார்.

அசாம் மாநில குழு

இதனையடுத்து அசாம் மாநிலத்தில் இருந்து வந்த வன பாதுகாவலர் ஹித்தேஷ் மிஸ்ரா, தமையிலான குழுவினரும், தமிழகத்தை சேர்ந்த துணை வன பாதுகாவலர் நாகநாதன் உள்ளிட்டோரும் யானையை நேற்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு அறிக்கையை மத்திய அரசுக்கும், அசாம் அரசுக்கும் சமர்ப்பிக்க இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.


Next Story