விடிய, விடிய நடந்தது - தசாவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி தந்த கள்ளழகர்- இன்று அழகர்மலைக்கு புறப்படுகிறார்
தசாவதார திருக்கோலங்களில் பக்தர்களுக்கு விடிய, விடிய கள்ளழகர் காட்சி அளித்தார். இன்று அவர் மதுரையில் இருந்து அழகர்மலைக்கு புறப்படுகிறார்
தசாவதார திருக்கோலங்களில் பக்தர்களுக்கு விடிய, விடிய கள்ளழகர் காட்சி அளித்தார். இன்று அவர் மதுரையில் இருந்து அழகர்மலைக்கு புறப்படுகிறார்.
வைகை ஆற்றில் கள்ளழகர்
சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது. முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தொடங்கிய சித்திரை திருவிழாவில் கடந்த 2-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மறுநாள் தேரோட்டமும் நடந்தது.
அழகர்கோவில் சித்திரை பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 5-ந் தேதி நடந்தது. தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
நேற்று முன்தினம் காலை வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி மதுரை வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு பக்தர்களின் அங்கப்பிரதட்சணம் நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்பினார்.
தசாவதார காட்சி
அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் உள்ளிட்ட கோலங்களில் காட்சி தந்தார்.
இறுதியாக நேற்று காலை மோகினி அவதாரத்தில் அழகர் தரிசனம் தந்தார். விடிய, விடிய தசாவதாரம் நிகழ்ச்சி அங்கு நடந்தது. இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமராயர் மண்டபத்தில் கூடி இருந்தனர்.
இன்று புறப்படுகிறார்
நேற்று மதியம் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமானார்.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து இன்று அழகர்மலைக்கு புறப்படுகிறார். இரவில் அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் காட்சி தந்தருள்கிறார். நாளை காலையில் கள்ளந்தரி வழியாக அழகர்கோவிலுக்கு அழகர் மலையான் செல்கிறார். அங்கு காலை 10.32 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் இருப்பிடம் சேர்கிறார். 10-ந் தேதி காலையில் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.