நீதித்துறை, அரசுத்துறை, போலீஸ்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழு கூட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நீதித்துறை, அரசுத்துறை, போலீஸ்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழு கூட்டத்தில் வழக்குகள், சாதிச்சான்று நிலுவை பட்டியல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நீதித்துறை, அரசுத்துறை, போலீஸ்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழு கூட்டத்தில் வழக்குகள், சாதிச்சான்று நிலுவை பட்டியல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
விழிக்கண் குழு கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நீதித்துறை, அரசுத்துறை, போலீஸ்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமை தாங்கினார். கலெக்டர் தீபக் ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான வழக்குகள், புதிதாக ஆய்வுக்கு வைக்கப்படும் வழக்குகள், புலன் விசாரணை வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணை முடிவுற்ற வழக்குகள், சாதிச்சான்று நிலுவை பட்டியல் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அம்பேத்கர் பிறந்தநாள்
மேலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் கல்வியின்தரம், வசதிகள், விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலக மேம்பாடு, பொங்கல் திருநாள், அம்பேத்கர் பிறந்தநாள், நினைவு நாளையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், கலைப்போட்டிகள், பேச்சு, கட்டுரைப்போட்டிகள் நடத்துதல், மத்தியஅரசின் சிறப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை, பயிர்நிலம் வழங்குதல், ஏற்கனவே வழங்கியதை பேணுதல், ஆதிதிராவிடர் மேம்பாடு போன்ற பல்வேறு பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு அனைத்து பணிகளும் விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.