ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 14 Sept 2023 2:45 AM IST (Updated: 14 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தேனி

தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை

திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் மெகத் ஷாஜகான். இவரது வீடு, தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் சாலையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரராஜன் தலைமையிலான அதிகாரிகள் ஷாஜகானின் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்கள் வீட்டுக்குள் சென்று தீவிர சோதனை நடத்தினர்.

மேலும் வீட்டில் இருந்த மெகத் ஷாஜகான், அவரது மனைவியிடம் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். அவர்களது உறவினர்கள் சிலரையும் அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை, மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. அதன்பிறகு அங்கிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காரில் புறப்பட்டு சென்றனர்.

ஆவணங்கள்

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் மெகத் ஷாஜகான், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள், தேனியில் உள்ள மெகத் ஷாஜகான் வீட்டில் இந்த சோதனையை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் சோதனையில் பணமோ, முக்கிய ஆவணங்களோ சிக்கவில்லை என்றார்.


Next Story