மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்
நீலகிரி மாவட்ட எல்லைகளில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட எல்லைகளில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தெரிவித்தார்.
புதிய போலீஸ் சூப்பிரண்டு
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த ஆஷிஷ் ராவத், கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை மெட்ரோ தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்த பிரபாகர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தின் 63-வது போலீஸ் சூப்பிரண்டாக பிரபாகர் நேற்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அவரிடம் பொறுப்புகளை ஆஷிஷ் ராவத் ஒப்படைத்தார். திண்டுக்கல்லை சேர்ந்த பிரபாகர் 2005-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, காவல்துறை பயிற்சி முடித்து மேற்கு சரகத்தில் பணியில் சேர்ந்துள்ளார். விழுப்புரம், சென்னையில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ளார். மேலும், சத்தியமங்கலத்தில் சிறப்பு அதிரடிப்படையில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். 2018-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சென்னை கட்டுப்பாட்டு அறையிலும், பின்னர் மெட்ரோ ரெயில் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்துள்ளார்.
தீவிர கண்காணிப்பு
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் கர்நாடகா, கேரள மாநிலங்களின் எல்லையில் உள்ளது. கேரளாவில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்குள் ஊடுருவாமல் தடுக்கும் வகையில், எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசின் உத்தரவின் பேரில் நீலகிரியை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். புதிதாக பொறுப்பேற்ற சூப்பிரண்டுக்கு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஸ்வரன், மகேஷ்குமார், செந்தில்குமார், விஜயலட்சுமி, யசோதா மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.