விழுப்புரம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


விழுப்புரம்  அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக வழங்கப்படும் உணவு முறைகள், குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம் உள்ளதா? என்பது குறித்து பதிவேடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து, குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்குமாறும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் கூடுதலாக காய்கறிகள், கீரை வகைகளை சேர்த்து வழங்குமாறும், அங்கன்வாடி மைய வளாகத்தில் உள்ள காலியிடங்களில் காய்கறி தோட்டங்கள் அமைத்து பராமரிக்கும்படியும் அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து பராமரிக்கப்படாமல் இருந்ததை கலெக்டர் மோகன் பார்வையிட்டார். அப்போது உடனடியாக அந்த குளத்தை சுற்றியுள்ள மரங்களை அகற்றுவதோடு, குளத்தை உடனடியாக தூர்வாரி மழைநீர் சேகரித்திடும் வகையில் பணிகளை மேற்கொண்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அலுவலர் அன்பழகி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story