வருகிற 9-ந்தேதி விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்
விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம், வருகிற 9-ந்தேதி நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை,
சினிமாவில் 'மாஸ்' நடிகராக கலக்கி வரும் விஜய், அரசியல் களத்திலும் தனது காலடித்தடத்தை பதிக்க தயாராகி வருகிறார். முன்னணி நடிகராக இருக்கும்போதே தனது ரசிகர் மன்றத்தை, மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய், சமூக சேவைகளில் தனது மக்கள் இயக்கத்தினரை ஈடுபடுத்தி வருகிறார்.
ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை இளைய தலைமுறையினரை குறிவைத்து தான் விஜய் தனது நகர்வுகளை அமைத்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பரிசுகளும், ரொக்கப்பரிசுகளும் வழங்கி பாராட்டி கவரவித்தார். அந்த கூட்டத்தில் பலரும் 'அண்ணா... வாங்கண்ணா' என்று அழைப்பு விடுத்தபோதும், மறுப்பு சொல்லாமல் சிரிப்பையே பதிலாக்கினார்.
நிர்வாகிகளுடன் ஆலோசனை
கடந்த ஜூலை 15-ந்தேதி, காமராஜர் பிறந்தநாளில் ஏழை மாணவர்களுக்காக இலவச இரவு நேர படிப்பகங்களும் தொடங்கப்பட்டன. இப்படி தொடர்ந்து இளைஞர்களை கவரும் நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள விஜய், தனது மக்கள் இயக்கத்தினரை அரசியல் தலைவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்தவும் கட்டளையிட்டு உள்ளார்.
கடந்த மாதத்தில் வக்கீல் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனித்தனியே நடத்தப்பட்டது.
இதனாலேயே அவரது அரசியல் வருகை வெகு சீக்கிரம் இருக்குமோ... என அரசியல் நோக்கர்கள் கருதி வருகிறார்கள்.
மகளிரணி கூட்டம்
தனது அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் விஜய், இந்தமுறை தாய்க்குலங்களை ஈர்க்க முடிவு செய்திருக்கிறார். மக்கள் இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்துக்கு விஜய் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
அதன்படி, வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் ரசிகைகளை அதிகளவில் மக்கள் இயக்கத்தில் சேர்ப்பது, அவர்களுக்கு இயக்க வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு ஆலோசனைகளை விஜய் சார்பில் புஸ்சி ஆனந்த் வழங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் விஜய் தரப்பில் இருந்து வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.