70-வது பிறந்தநாளை கொண்டாடினார் விஜயகாந்த், தொண்டர்களை பார்த்து கையசைத்தார்
70-வது பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்த், கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
சென்னை,
தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த்தின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்து குவிந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலம் என்பதால் தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கவில்லை. இந்தநிலையில் விஜயகாந்த்தை நேரில் சந்திக்கும் ஆர்வத்தில் மலர் மாலைகள், பூங்கொத்துகள், கோவில் பிரசாதங்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
கட்சி தலைமை அலுவலகம் வந்த விஜயகாந்த், மதியம் 12 மணியளவில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார்.
கையசைத்த விஜயகாந்த்
அப்போது அவர் தொண்டர்களை பார்த்து வணக்கம் தெரிவித்தார், ஆர்வமாக கைகளை அசைத்தார். தனது பெருவிரலை உயர்த்தி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
இதனை கண்ட தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
நடிகர் கார்த்தி வாழ்த்து
அதைத்தொடர்ந்து, தொண்டர்கள் கொண்டு வந்த பரிசு பொருட்கள் மற்றும் மலர் கொத்துகளை விஜயகாந்த் சார்பில் அவரது மனைவியும், கட்சி பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்.
அவருடன் அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் கட்சி துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்த சாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பொருளாளர் நடிகர் கார்த்தி, விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோன்று நடிகர்கள் ரோபோ சங்கர், மீசை ராஜேந்திரன், போண்டா மணி, முத்துக்காளை மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, நடிகை வடிவுக்கரசி உள்ளிட்ட பல திரைப்பட பிரபலங்களும் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இலங்கை ரசிகை
நமது அண்டை நாடான இலங்கையில் உள்ள கண்டியை சேர்ந்தவர் சகுந்தலா. தையல் தொழில் செய்து வரும் இவர் விஜயகாந்தின் தீவிர ரசிகை.
இவர் இலங்கையில் இருந்து தமிழகம் வந்து விஜயகாந்தை நேரில் சந்தித்து நேற்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
கவர்னர் தமிழிசை வாழ்த்து
விஜயகாந்தின் பிறந்தநாளை யொட்டி, தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''அண்ணன் விஜயகாந்த் பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என்று தெரிவித்து உள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சசிகலா, திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.