விஜயகாந்த் நலமுடன் உள்ளார் - பிரேமலதா
யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை,
உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.மேலும் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதனிடையே விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அவருடைய மனைவி பிரேமலதா எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.அதில்,
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.என பிரேமலதா தெரிவித்துள்ளார்.