விஜயகாந்த் மைத்துனர் சுதிஷ் மனைவியிடம் ரூ. 43 கோடி மோசடி


விஜயகாந்த் மைத்துனர் சுதிஷ்  மனைவியிடம் ரூ. 43 கோடி மோசடி
x
தினத்தந்தி 22 Feb 2024 8:50 AM GMT (Updated: 23 Feb 2024 12:55 AM GMT)

விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதிஷ் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ். இவருடைய மனைவி பூரண ஜோதி. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-எனக்கும், என் கணவருக்கும் சொந்தமான நிலம் சென்னை மாதவரம் மெயின் ரோட்டில் இருந்தது. 2.10 ஏக்கரில் உள்ள அந்த நிலம் காலி மனையாக இருந்தது. அதில் வீடு கட்டி விற்பனை செய்ய சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன உரிமையானர் சந்தோஷ் சர்மா (வயது 44) என்பவரிடம் கடந்த 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம்.

அந்த ஒப்பந்தத்தின்படி, எங்களுடைய நிலத்தில் 234 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, அதில் 78 வீடுகளை எனக்கும், மீதி உள்ள 156 வீடுகளை கட்டுமான நிறுவன உரிமையாளரும் எடுத்துக்கொள்ள ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் ஒப்பந்தத்தை மீறி எனக்கு ஒதுக்கீடு செய்த 78 வீடுகளில், 48 வீடுகளை எனது கையெழுத்தை போலியாக போட்டு கட்டுமான நிறுவன உரிமையாளர் விற்பனை செய்து விட்டார். இதன் மூலம் ரூ.43 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது.மேலும் ஒரே வீட்டை பலருக்கு விற்பனை செய்தும், மோசடி அரங்கேறி இருக்கிறது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் சந்தோஷ் சர்மா மற்றும் சாகர் (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதாக மத்திய குற்றப்பிரிவில் 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.


Next Story