விக்கிரமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் கபடி போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
விக்கிரமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் கபடி போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த மாதம் அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அரசு பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது. பின்னர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான 40 அணிகள் கலந்து கொண்ட கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் (6 ரவுண்டு) வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயமும், பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவிகளை அங்கு சென்றிருந்த மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் வினோத் குமார், சுரேஷ்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிகளை விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களும், விக்கிரமங்கலம் பள்ளி ஆசிரியை மற்றும் ஆசிரியர்களும், பள்ளியில் பயிலும் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர் . மேலும் வரும் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய அளவில் நடைபெறும் கபடி போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.