கார் மோதி கிராம நிர்வாக உதவியாளர் பலி


கார் மோதி கிராம நிர்வாக உதவியாளர் பலி
x

அறந்தாங்கி அருகே கார் மோதி கிராம நிர்வாக உதவியாளர் பலியானார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

அறந்தாங்கி:

கிராம நிர்வாக உதவியாளர் பலி

அறந்தாங்கி அருகே இடையார் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவர் ஆளப்பிறந்தான் ஊராட்சியில் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுபா என்ற மனைவியும், வஷிரா(5), தனசெயன் (3) என 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று செந்தில்குமார் ஆளப்பிறந்தான் ஊராட்சியில் இருந்து அறந்தாங்கிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரது செல்போனுக்கு அழைப்பு வந்ததால் மோட்டார் சைக்கிளை சாலையோரமாக நிறுத்தி விட்டு செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு பின்னால் போசம்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை (42) என்பவர் ஓட்டி வந்த கார், செந்தில்குமார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

மறியல்

இதையடுத்து செந்தில்குமார் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறியும், அண்ணாதுரையை கைது செய்யக்கோரியும், செந்தில்குமாரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அண்ணாதுரையை கைது செய்யும் வரையில் கலைந்து செல்ல மாட்டோம் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உறவினர் தீக்குளிக்க முயற்சி

இதையடுத்து புதுக்கோட்டையில் இருந்து அதிவிரைவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது மறியலில் ஈடுபட்டு இருந்த செந்தில்குமாரின் உறவினரான கூகனூர் குடியிருப்பை சேர்ந்த பாலு (38) என்பவர் பாட்டிலில் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதையடுத்து போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையே அண்ணாதுரை அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து போலீசார் செந்தில்குமாரின் உறவினர்களிடம் கூறி அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து காண்பித்தனர். அதன்பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story