இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்


இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்
x

வடகோவனூரில் இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

வடகோவனூரில் இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடகோவனூரில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு கிராம மக்கள், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறவும், அரசு சார்ந்த திட்டங்கள் குறித்து விவரம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தில் சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. கட்டித்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

மழை காலங்களில் தண்ணீர் கட்டிடத்துக்குள் கசிவதால் உள்ளே வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இங்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.எனவே சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும், அல்லது கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து வடகோவனூரை சேர்ந்த சந்தியா கூறுகையில், இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இருப்பிடச்சான்று, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் பெற தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் இங்கு வரும் மக்கள், கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அகற்றி விட்டு அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டிடத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆவணங்கள் சேதம் அடைய வாய்ப்பு

வடகோவனூரை சேர்ந்த சுடர்மணி கூறுகையில், இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது.

இந்த அலுவலகம் தொடர்ந்து இதே கட்டிடத்தில் செயல்படுகிறது. கட்டிடம் சேதம் அடைந்துள்ளதால் மழை நீர் கசிந்து ஆவணங்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டிடத்தர வேண்டும் என்றார்.


Next Story