ரூ.15 லட்சத்தில் குடியிருப்புடன் கூடிய கிராம நிர்வாக அலுவலகம்


ரூ.15 லட்சத்தில் குடியிருப்புடன் கூடிய கிராம நிர்வாக அலுவலகம்
x

ரூ.15 லட்சத்தில் குடியிருப்புடன் கூடிய கிராம நிர்வாக அலுவலகத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

வேலூர்

கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்புடன் கூடிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட கலெக்டர் பெ.குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் அ.கீதா, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனிசெந்தில்குமார் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டிதிறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மகாதேவமலைக்கு முதன்முதலாக நான்தான் ரோடு போட்டுக் கொடுத்தேன். சாமியாரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் நேரு புதிதாக ஒரு பெரிய தேர் செய்து கொடுத்துள்ளார். அந்தத் தேர்தான் இன்று மகாதேவமலை மீது ஓடிக் கொண்டிருக்கிறது. நான் மோர்தானா அணை கட்டி கால்வாய்கள் அமைத்துக் கொடுத்ததால் தான் அண்மையில் பெய்த மழையால் இப்பகுதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, மோர்தானா அணை கால்வாய்களை சீரமைத்து, அதன் கரைகளை பலப்படுத்தி உள்ளேன். இத்தகைய மோர்தானா அணையை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். நான் எம்.எல்.ஏ. ஆனபிறகுதான் ரோடு, மின் விளக்கு, போக்குவரத்திற்கு வசதி செய்து கொடுத்துள்ளேன் என்றார். விழாவில் மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர் கண்ணன் கலந்து கொண்டனர்.

கிராம நிர்வாக அலுவலர் ஜெ.ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story