ராணுவ வீரரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
நாட்டறம்பள்ளி அருகே பட்டாவில் பெயர் மாற்றுவதற்காக ராணுவ வீரரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
பெயர் மாற்றம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன், ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் 40 நாள் விடுமுறையில் வந்த தமிழரசன் ஊருக்கு வந்தார். அவருடைய தந்தை தனக்கு கொடுத்த 1.64 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றுவதற்காக மல்லகுண்டா பகுதியில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பனிடம் சென்றார்.
அப்போது பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் ரூ.4 ஆயிரம் ஞ்சம் வேண்டும் என்றும், உங்களுக்காக, ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொள்கிறேன். ரூ.3 ஆயிரம் மட்டும் கொடுங்கள் என்று கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் கேட்டுள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் கைது
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தமிழரசன் அது குறித்து ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி ஆகியோர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தமிழரசனிடம் ரசாயனம் பூசப்பட்ட ரூ.3 ஆயிரத்தை கொடுத்தனர்.
அதனை அவர் நாட்டறம்பள்ளியை அடுத்த சாலை அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பனிடம் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரை நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.