ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
நெல்லை அருகே ஒப்பந்த பணிக்கு சொத்து சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். அவருடைய உதவியாளரும் சிக்கினார்.
மானூர்:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே பிள்ளையார்குளம் குறிச்சி நகரைச் சேர்ந்தவர் பேச்சி மகன் லவக்குமார் (வயது 33). விவசாயியான இவர் 2 பொக்லைன் எந்திரங்களை சொந்தமாக வாங்கி வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார். மேலும் இவர் அரசு ஒப்பந்ததாரராக பதிவு செய்து ஒப்பந்த பணிகளை பெறுவதற்காக, ரூ.38 லட்சத்துக்கு சொத்து சான்று கேட்டு கீழ பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
அங்கு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அருள் மிக்கேல் சந்தியாகு (38) என்பவர் லவக்குமாருக்கு சொத்து சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.1 லட்சத்துக்கு ரூ.1,500 வீதம் ரூ.38 லட்சத்துக்கு ரூ.57 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். பின்னர் ரூ.50 ஆயிரம் கொடுக்குமாறு இறுதி செய்யப்பட்டது.
ரூ.50 ஆயிரம் லஞ்சம்
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத லவக்குமார் இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயன மை தடவிய ரூ.50 ஆயிரத்தை லவக்குமார் நேற்று கீழ பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அலுவலத்துக்கு கொண்டு சென்றார். அந்த பணத்தை கிராம நிர்வாக அதிகாரி அருள் மிக்கேல் சந்தியாகுவிடம் லவக்குமார் வழங்கினார்.
அப்போது அங்கு சாதாரண உடையில் நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் உதவி சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, கிராம நிர்வாக அதிகாரி அருள் மிக்கேல் சந்தியாகுவை பிடிக்க முயன்றனர்.
கைது
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர் அருள் மிக்கேல் சந்தியாகு தன்னிடம் இருந்த லஞ்சப் பணத்தை கிராம நிர்வாக உதவியாளர் (தலையாரி) மாரியப்பனிடம் (50) கொடுத்து வெளியே ஓடி விடுமாறு கூறினார். லஞ்சப் பணத்தை பெற்று கொண்ட தலையாரி மாரியப்பன் அறையில் இருந்து வெளியேறினார். எனினும் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தலையாரியை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரி அருள் மிக்கேல் சந்தியாகு, தலையாரி மாரியப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நெல்லை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி செந்தில்முரளி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். கைதான 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.நெல்லை அருகே ஒப்பந்த பணிக்கு சான்றிதழ் கேட்டவரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.