கிராம நிர்வாக அலுவலர் கொலைவழக்கு:தூத்துக்குடி கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை


கிராம நிர்வாக அலுவலர் கொலைவழக்கு:தூத்துக்குடி கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலைவழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி

முறப்பநாடு கிராமநிர்வாகஅலுவலர்கொலை வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53). இவர், ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25.04.2023 அன்று தனது அலுவலகத்தில் இருந்த போது, மணல் கடத்தல் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாரிமுத்து என்பவர் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சாட்சிகள் விசாரணை

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில் சாட்சிகள் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 4 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள், இறந்த கிராம நிர்வாக அலுவலரின் உறவினர்கள் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்றும் சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது. அரசு தரப்பில் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜராகி வாதாடி வருகிறார்.


Next Story