கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
ஊட்டி கிராம நிர்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து நீலகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
ஊட்டி கிராம நிர்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து நீலகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியிட மாற்றம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சாம்சன். இவரை ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு குந்தா தாலுகாவுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வருவாய் உயர் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் ஊட்டி, கூடலூர், குன்னூர், பந்தலூர், குந்தா, கோத்தகிரி ஆகிய 6 தாலுகாக்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்தனர்.
காத்திருப்பு போராட்டம்
தொடர்ந்து தாலுகா அலுவலகம் முன்பு திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதேபோல் அனைத்து தாலுகா அலுவலகம் முன்பும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறும்போது, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் எந்தவித காரணமும் இன்றி உள்நோக்கத்தோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதேபோல் ஊட்டி தாலுகாவில் அடிக்கடி பணியிட மாறுதல் அளிப்பதால் முறையாக பணியாற்ற முடியவில்லை என்றனர்.
அலுவலக பணிகள் பாதிப்பு
இதேபோல் கோத்தகிரி தாலுகாவில் பணிபுரியும் 16 கிராம நிர்வாக அலுவலர்கள் பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் வட்ட தலைவர் மோகன் குமார் தலைமை தாங்கினார். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.