கிராம சபை கூட்டம்
கீழவிளாத்திகுளத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
எட்டயபுரம்:
தொழிலாளர் தினத்தையொட்டி விளாத்திகுளம் அருகே உள்ள கீழவிளாத்திகுளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நவநீத கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறுகையில், அனைத்து வீடுகளுக்கும் தேவையான குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் பணியாக கீழ விளாத்திகுளம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சமும், குரளயம்பட்டிக்கு ரூ.19.85 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட உள்ளது. அதே போல், 2024-25-ம் ஆண்டில் கீழவிளாத்திகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ விளாத்திகுளம், குரளயம்பட்டி, சோலைமலையன்பட்டி கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.42 லட்சத்தில் சிமெண்டு சாலை, வாறுகால் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார். கூட்டத்தின்போது, தையல் எந்திரம் வாங்குவதற்காக உதவி கேட்ட பத்திரகாளி என்ற பெண்ணுக்கு, எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் ரூ.10 ஆயிரம் வழங்கினார். மீதமுள்ள பணம் கூட்டுறவு சங்கம் மூலம் வட்டியில்லா கடனாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேலு, முத்துக்குமார், மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.