எலவம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
எலவம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
சுதந்திர தினத்தையொட்டி கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது பொதுமக்கள் தங்களது குறைகளை கூறினர். கூட்டத்தில், மழை நீரால் வீடுகளை இழந்த 20 குடும்பத்தினர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, எலவம்பட்டி ஊராட்சி பகுதிக்கு காவேரி கூட்டு குடிநீர், ஏற்கனவே இலவச வீட்டு மனை பட்டா வழங்கியவர்களுக்கு இலவச வீடு கட்ட ஆணை, சாலைகளை புதுப்பிக்கவும் மற்றும் ஓடு மற்றும் சிமெண்டு சீட் வீடுகளில் உள்ளவர்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் லதா, மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகப்பிரியா கமலநாதன், உள்பட வார்டு உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.