குடும்பத்துடன் கருணைக்கொலைக்கு அனுமதிக்கக்கோரி கிராம உதவியாளர் தர்ணா


குடும்பத்துடன் கருணைக்கொலைக்கு அனுமதிக்கக்கோரி கிராம உதவியாளர் தர்ணா
x

புதுக்கோட்டையில் குடும்பத்துடன் கருணை கொலைக்கு அனுமதிக்க கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த கிராம உதவியாளர் தர்ணாவில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை

கிராம உதவியாளர்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். புதுக்கோட்டை அருகே பூவரசகுடியில் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் அன்சாரி (வயது 46).

இவர் தனது மனைவி நஜ்ரத் பேகம், தாய் ஆசியா பீவி ஆகியோருடன் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை அப்புறப்படுத்தி மனு கொடுக்க அறிவுறுத்தினர்.

கருணைக்கொலைக்கு...

மேலும் அன்சாரி தனக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், சம்பளம் வழங்க மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் குடும்பத்துடன் கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி மனு கொடுப்பதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார்.

அவரை கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அழைத்து சென்று போலீசார் மனு கொடுக்க வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் மனுவை பெற்று சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அன்சாரி தற்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் கடை

இதேபோல அறந்தாங்கி அருகே குன்னக்குரும்பி கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வந்ததாகவும், அதனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட நிலையில் தற்போது அதனை மீண்டும் திறந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனால் அந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கூட்டத்தில் மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 331 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொன்னமராவதி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர் சீருடையில் வந்து மனு அளித்தனர். அதில் அவர்கள் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தங்களுக்கு வழங்க கோரி தெரிவித்திருந்தனர்.


Next Story