குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்; கிராம மக்கள் மனு
ஜி.உசிலம்பட்டியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் ஊராட்சி தலைவர் தலைமையில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
ஆண்டிப்பட்டி அருகேயுள்ள ஜி.உசிலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுமேந்திரன் தலைமையில் பொதுமக்கள் பலர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், "ஜி.உசிலம்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் வடிகால் வாரியம் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை.
தினமும் 1 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டிய நிலையில், 10 ஆயிரம், 20 ஆயிரம் லிட்டர் என்று மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கு காரணம் கேட்டால் தினமும் ஒரு காரணம் கூறுகின்றனர். எனவே, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் அவர்கள் கலெக்டரிடம் கூறுகையில், "போதிய அளவில் குடிநீர் வழங்காத நிலையில், குடிநீர் கட்டணத்துக்கான ரசீதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வழங்கி உள்ளனர். எனவே தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.