அங்கன்வாடி மையம் கட்டக்கோரி குழந்தைகளுடன் வந்து கிராம மக்கள் மனு
அங்கன்வாடி மையம் கட்டக்கோரி குழந்தைகளுடன் வந்து கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகள் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது சாணார்பட்டி ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், சாணார்பட்டி ஒன்றியம் அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சி சோழகுளத்துப்பட்டியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு 30-க்கும் அதிகமாக குழந்தைகள் இருக்கின்றனர். இந்த ஊரில் அங்கன்வாடி மையம் இல்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு பணிகள் தொடங்கிய நிலையில் வேறு ஊருக்கு அது மாற்றப்பட்டது. இதனால் அஞ்சுகுழிப்பட்டி அல்லது எல்லப்பட்டியில் இருக்கும் அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்பும் நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள் கூலி வேலைக்கு செல்வதால் வெளியூர்களில் இருக்கும் அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப முடியவில்லை. எனவே சோழகுளத்துப்பட்டியில் அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் சோதனை செய்ததில், ஒருவர் மண்எண்ணெய் பாட்டிலை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்ததோடு, அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர் சண்முகநதி பகுதியை சேர்ந்த விவசாயி முத்துகிருஷ்ணன் (வயது 60) என்பதும், அவருடைய நிலத்தை ஒருவர் அபகரித்து கொண்டதால் தீக்குளிக்க மண்எண்ணெயை கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.