உப்புக்கோட்டை-உப்பார்பட்டி இடையே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படுமா?; கிராம மக்கள் எதிர்பார்ப்பு
உப்புக்கோட்டை-உப்பார்பட்டி இடையே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. அந்த கிராமங்களின் வளர்ச்சி என்பது குடிநீர், சாலை, பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான் இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி. கிராமங்கள் வாழ்ந்தால் தான் இந்தியா வாழ முடியும் என்றார் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு.
நகரங்களுக்கு இணையாக கிராமங்களில் அடிப்படை வசதிகளை வழங்குவது அவசியமாகும். நாட்டில் பல்வேறு திட்டங்கள், சலுகைகள், முன்னுரிமைகள் கிராமங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பல்வேறு கிராமங்களில் எட்டப்பட வேண்டிய வளர்ச்சி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.
முல்லைப்பெரியாறு
அந்த வகையில் தேனி மாவட்டம் உப்புக்கோட்டை, உப்பார்பட்டி கிராமங்களுக்கு இடையே செல்லும் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
தேனி அருகே திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, உப்பார்பட்டி கிராமம். அதேபோல் தேனியில் இருந்து குச்சனூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, உப்புக்கோட்டை கிராமம். இந்த 2 கிராமங்களுக்கு இடையே முல்லைப்பெரியாறு செல்கிறது. உப்புக்கோட்டையை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் ஆற்றை கடந்து உப்பார்பட்டி பகுதியில் உள்ளன. அதேபோல் உப்பார்பட்டியை சேர்ந்த விவசாயிகளின் நிலங்கள் உப்புக்கோட்டையில் உள்ளன.
இதனால் 2 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் விவசாயிகள் சாகுபடி விதைகள், உரங்கள் கொண்டு செல்லவும், அறுவடை செய்த விளைப்பொருட்களை எடுத்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். பாலம் இருந்தால் 2 கிராம விவசாயிகளும் தங்களது விளைப்பொருட்களை எளிதாக எடுத்துச்செல்ல முடியும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள்
இதேபோல் உப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள டொம்புச்சேரி, பாலார்பட்டி, பத்ரகாளிபுரம், காமராஜபுரம், விசுவாசபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், தேனியை அடுத்த வீரபாண்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்கள் தங்களது கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் உப்புக்கோட்டை வந்து, அங்கிருந்து தேனி செல்ல வேண்டும். அதன்பிறகு தேனியில் இருந்து வீரபாண்டிக்கு சென்று வருகின்றனர். இதன்மூலம் அவர்கள் ஏறத்தாழ 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் உப்புக்கோட்டை-உப்பார்பட்டி இடையே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டால் மாணவர்கள் 4 கிலோ மீட்டர் தூரத்திலேயே தங்களது கல்வி நிலையங்களுக்கு செல்ல முடியும். இதனால் மாணவர்களின் வீண் அலைச்சல், பணம் மற்றும் காலவிரயம் குறையும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மேலும் உப்புக்கோட்டையில் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உப்பார்பட்டியை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களும் உப்புக்கோட்டைக்கு சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றி வருகின்றனர்.
பாலம் அமைக்கப்படுமா?
இதுதவிர ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் உப்புக்கோட்டை, உப்பார்பட்டி ஆகிய 2 கிராம மக்கள் இணைந்து முல்லைப்பெரியாற்றில் கள்ளழகர் எதிர்சேவை விழா கொண்டாடுவார்கள். இதற்காக உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்திலும், உப்பார்பட்டி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்திலும் முல்லைப்பெரியாற்றின் கரையில் எதிர்சேவை வழிபாடு நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அப்போது சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் ஆற்றை கடந்து வந்து சாமி தரிசனம் செய்ய முடியாத சூழல் உள்ளது.
மேலும் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின்போது, உப்புக்கோட்டை பகுதி பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி எடுத்து வீரபாண்டிக்கு நடந்து செல்வார்கள். அப்போது தேனி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அதற்கு மாற்றாக உப்பார்பட்டி வழியாக பக்தர்கள் எளிதில் செல்லமுடியும்.
இதனால் உப்புக்கோட்டை-உப்பார்பட்டி இடையே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
ஆபத்தான முறையில்...
ராமகிருஷ்ணன் (வியாபாரி, உப்புக்கோட்டை):- உப்புக்கோட்டை பகுதியில் விவசாயம் சார்ந்த கிராமங்கள் உள்ளன. இங்கு விளையும் காய்கறி, பூக்களை கொள்முதல் செய்து வெளியூர் சந்தைகளுக்கு அனுப்புவதற்காக ஏராளமான வியாபாரிகள் உள்ளனர். இங்கிருந்து விளைப்பொருட்கள் அதிக அளவில் தேனி, கம்பம், சின்னமனூர், குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஊர்களுக்கு விளைப்பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்றாலும், கொள்முதல் செய்ய வியாபாரிகள் வர வேண்டும் என்றாலும் தேனி சென்று தான் வரவேண்டும். இதனால் காலவிரயம் ஏற்படுகிறது. எனவே அதனை தவிர்க்க உப்புக்கோட்டை-உப்பார்பட்டி இடையே பாலம் அமைத்தால் உதவியாக இருக்கும்.
விக்னேஷ் (பொக்லைன் எந்திர ஆபரேட்டர்):- ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் முல்லைப்பெரியாற்றில் கள்ளழகர் எதிர்சேவை விழாவும், வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவும் நடைபெறுகிறது. அந்த திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். அப்போது உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த பக்தர்கள் முல்லைப்பெரியாற்றை ஆபத்தான முறையில் கடந்து உப்பார்பட்டி வழியாக வீரபாண்டிக்கு சென்று வருகின்றனர். எனவே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதாகர் (அரசு பள்ளி ஆசிரியர், உப்புக்கோட்டை):- உப்புக்கோட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அதன்பிறகு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வீரபாண்டிக்கு செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் வீரபாண்டிக்கு செல்ல வேண்டும் என்றால் 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டும். உப்புக்கோட்டையில் இருந்து தேனிக்கும், பின்னர் அங்கிருந்து வீரபாண்டிக்கும் சுற்றி சென்று வருகின்றனர். ஆனால் உப்பார்பட்டிக்கு பாலம் அமைக்கப்பட்டால் வீரபாண்டிக்கு எளிதில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியும். எனவே 2 கிராமங்களுக்கு இடையே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைத்தால் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.