புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு


புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
x

புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை கொடுத்தனர்.

அதன்படி, மடூர் ஊராட்சி புகையிலைபட்டி ஊர் நாட்டாண்மை சூசைமாணிக்கம் தலைமையிலான கிராம மக்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில், புகையிலைபட்டியில் புனித சந்தியாகப்பர் திருவிழா பிப்ரவரி 13-ந்தேதியும், புனித செபஸ்தியார் திருவிழா 14-ந்தேதியும் நடக்கிறது. இதையொட்டி சப்பரபவனி, பொங்கல் வைத்தல், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆகியவை நடைபெறுகின்றன. இதையடுத்து 15-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் கொடுத்த மனுவில், அரசு கேபிள் டி.வி.யில் கடந்த 2017-ம் ஆண்டு அனலாக் முறை நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிலையில் அனலாக் முறை ஒளிபரப்புக்கு நிலுவை தொகை இருப்பதாக கூறி போலீஸ், வருவாய்த்துறை மூலம் ஆபரேட்டர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். எனவே நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் இலவசமாக வழங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை நிறுத்த வேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கான நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

செல்போன் கோபுரம்

திண்டுக்கல் மாநகராட்சி 35-வது வார்டு கவுன்சிலர் ஜோதிபாசு தலைமையில் ரெஜினாநகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், ரெஜினாநகரில் குடியிருப்புகளுக்கு அருகே செல்போன் கோபுரம் அமைக்கப்பட இருக்கிறது. அந்த செல்போன் கோபுரம் அமைந்தால் கதிர்வீச்சால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே செல்போன் கோபுரம் அமைப்பதை தடை செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா, இளைஞரணி துணைத்தலைவர் மோகன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரித்து தனிநாடு வேண்டும் என்று தொல்.திருமாவளவன் பேசி வருகிறார். ராணுவ வீரர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் மிரட்டுகின்றனர். இந்து மதம், தமிழர்களின் நம்பிக்கை, கலாசாரம், கடவுள் நம்பிக்கை குறித்து அவதூறாக பேசுகின்றனர். எனவே தொல்.திருமாவளவனின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள்

இதேபோல் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், கடந்த ஓராண்டாக புதிதாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் விசாகன், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Next Story