கிராமத்து மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி
விருதுநகர் அருகே கிராம மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி கிராமத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய சமுதாயத்தினர் வளைகுடா நாடுகளிலும், இந்தியாவில் உள்ள பெரு நகரங்களிலும் பணி நிமித்தம் வசித்து வருகின்றனர். இதனால் சொந்த கிராமத்தில் வசித்து வரும் குடும்ப பெரியவர்களையும், குடும்பத்தினரையும் சந்திக்க இயலாத நிலையில் இருந்து வந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக ஆண்டுதோறும் குடும்பத்தினர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 2 தினங்களாக இந்த கிராமத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளிலும் பல பெரு நகரங்களிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது குடும்ப பெரியவர்களை வழிகாட்டலை கேட்டு தெரிந்து கொள்வதோடு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் அனைவரும் சொந்த பந்தங்களாக இருக்கும் நிலையில் திருமண ஏற்பாடுகள் செய்வதற்கும் இந்த சந்திப்பு நிகழ்ச்சி வாய்ப்பாக அமைகிறது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தனித்தனியே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டில் புதிய ஏற்பாடாக கிராமத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படித்த மாணவர்களில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.