பாலம் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயற்சி
கோபால்பட்டி அருகே பாலம் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.
கோபால்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம், மாமரத்துப்பட்டி. இங்கு சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திண்டுக்கல்-நத்தம் சாலையில் இருந்து ஒத்தக்கடை வழியாக மாமரத்துபட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே திருமணிமுத்தாறு ஓடுகிறது.
இதற்காக அந்த சாலையில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த பாலம் பாசிப்படர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் செல்லும் போது வழுக்கி விழுந்து விபத்தை சந்திக்கும் சூழல் உள்ளது. மேலும் தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே தரைப்பாலத்திற்கு பதிலாக புதிய உயர்மட்ட பாலம் அமைத்துத்தர வேண்டும் என்று மாமரத்துப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் மாமரத்துப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் பாலம் அமைக்கக்கோரி இன்று காலை ஒத்தக்கடையில் உள்ள திண்டுக்கல்-நத்தம் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு அருண்கபிலன், சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன், கணவாய்பட்டி ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், கணவாய்பட்டி ஊராட்சி செயலர் வெற்றிவேந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் தரைப்பாலம் உள்ள பகுதிக்கு கிராம மக்களுடன் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது உயர்மட்ட பாலம் குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.