வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி; திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்லை அடுத்த வன்னியபாறைப்பட்டியை சேர்ந்த பெண்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தீக்குளிப்பதற்காக, மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்தனர். அதை பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், வன்னியப்பாறைபட்டியில் 30 குடும்பத்தினர் நிலம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறோம். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசிக்கிறோம். மேலும் நாங்கள் வசிக்கும் இடத்துக்கு உட்பிரிவு செய்து வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தோம். இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. மேலும் எங்கள் குடியிருப்புக்கு சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை.
எனவே 30 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அதேபோல் எங்களுடைய குடியிருப்புக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என்றனர். இதையடுத்து அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி, மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். ஒரே ஊரை சேர்ந்த 15-க் கும் மேற்பட்டோர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.