குடிநீர், போக்குவரத்து வசதியின்றி மக்கள் வெளியேறியதால் நினைவு சின்னமாக மாறிய 'கோட்டையமேடு' தீவு கிராமம் வீடு, பள்ளி கட்டிடங்கள் வீணாக கிடக்கிறது
குடிநீர், போக்குவரத்து வசதியின்றி மக்கள் வெளியேறியதால் கோட்டையமேடு தீவு கிராமம் நினைவு சின்னமாக மாறி உள்ளது. அங்கு வீடு, பள்ளி கட்டிடங்கள் வீணாக கிடக்கிறது.
குடிநீர், போக்குவரத்து வசதியின்றி மக்கள் வெளியேறியதால் கோட்டையமேடு தீவு கிராமம் நினைவு சின்னமாக மாறி உள்ளது. அங்கு வீடு, பள்ளி கட்டிடங்கள் வீணாக கிடக்கிறது.
கொள்ளிடம் ஆறு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு, கோட்டையமேடு, கொடியம்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழிலை நம்பியே உள்ளனர். இங்கு இயற்கையாகவே மீன் பிடித்து துறைமுகம் அமைந்திருப்பதை மீனவர்கள் வரப்பிரசாதமாக பார்க்கிறார்கள். திருச்சி முக்கொம்பில் இருந்து பிரியும் கொள்ளிடம் ஆறு அங்கிருந்து அணைக்கரைக்கு வந்து வடிகாலாக கடலுடன் கலக்கும் பகுதிதான் பழையாறு துறைமுகம். கொள்ளிடம் ஆறு அணைக்கரை பகுதியில் அகலமாக காட்சி அளிக்கிறது.
தீவு கிராமங்கள்
பழையாறு கடற்கரை கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு திட்டுகள் அமைந்துள்ளன. இந்த திட்டுகள் சிலவற்றில் கிராமங்கள் அமைந்துள்ளன. இவை ஆற்றின் நடுவே தீவு போன்று காட்சி அளிக்கிறது. கோட்டையமேடு, கொடியம்பாளையம் ஆகிய 2 கிராமங்களும் தீவு கிராமங்களாக உள்ளன. இந்த கிராமங்களின் ஒருபுறம் வங்கக்கடல், மறுபுறம் கொள்ளிடம் ஆறு என தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த 2 கிராமங்களில் கொடியம்பாளையத்தில் மட்டுமே தற்போது மக்கள் வசித்து வருகிறார்கள். கோட்டையமேடு கிராமத்தில் தற்போது மக்கள் வசிக்கவில்லை.
நினைவு சின்னம்
இங்கு வசித்து வந்த 300 குடும்பங்கள் குடிநீர் உப்பு நீராக இருந்ததாலும், போக்குவரத்து வசதி இல்லாததாலும் கிராமத்தை விட்டு வெளியேறி கொள்ளிடம் பகுதிக்கும், சிதம்பரம் பகுதிக்கும் இடம் பெயர்ந்து விட்டனர். இதனால் கோட்டையமேடு குடியிருப்பு பகுதி கடந்த 13 ஆண்டுகளாக வெறிச்சோடி கிடக்கிறது.
அங்கு கிராம மக்கள் விட்டுச்சென்ற வீடுகள், பள்ளி கட்டிடம், மின்கம்பங்கள், கோவில்கள், குளங்கள் நினைவு சின்னமாக மாறி விட்டன. மக்கள் விட்டு சென்றதால் வீடுகள், பள்ளி கட்டிடங்கள் வீணாக சிதிலம் அடைந்து கிடக்கின்றன.
இதுகுறித்து கோட்டையமேடு கிராமத்தில் வசித்து வந்த கல்லூரி பேராசிரியர் திருமேனி கூறுகையில், 'நாங்கள் ஆண்டாண்டு காலமாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் காட்டூர் ஊராட்சியை சேர்ந்த கோட்டையமேடு கிராமத்தில் வசித்து வந்தோம். அந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள கொள்ளிடம், சீர்காழி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் ஆற்று நீரை படகு மூலமாக கடந்து செல்ல வேண்டும்.
கோவிலில் வழிபாடு
இதனால் நாங்கள் போக்குவரத்துக்கு பெரும் சிரமப்பட வேண்டி இருந்தது. அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. அரசு சார்பில் எங்கள் கிராமத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தினாலும் குடிநீர் வசதி இல்லை.
இதனால் கிராமத்தை விட்டு வெளியேறி விட்டோம். அங்கு உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று படையலிட்டு வழிபாடு நடத்துவோம். அப்போது உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவோம்' என்றனர்.
சோழர் கால கோட்டை இருந்த ஊர்
கோட்டையமேடு கிராமத்தில் சோழர் காலத்தில் பெரிய கோட்டை ஒன்று கட்டப்பட்டது. அங்கு மன்னர் வசித்து வந்துள்ளார். அப்போது நடந்த போரில் கோட்டையமேடு கோட்டையை கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் இருந்து பீரங்கி மூலம் தகர்த்ததாக வரலாறு கூறுகிறது. பீரங்கி வைத்திருந்த பகுதி தற்போது பீரங்கிமேடு என்று அழைக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் வருகை
கோட்டையமேடு கிராமத்தை சுற்றி அலையாத்திக்காடு உள்ளது. இந்த அலையாத்திக்காட்டை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் படகு மூலமாக சுற்றிப்பார்த்து வருகிறார்கள். அப்போது யாருமே வசிக்காத கிராமத்தையும் சுற்றுலா பயணிகள் ஆச்சர்யமாக பார்த்து செல்கிறார்கள்.