பூட்டியே கிடக்கும் கிராமசேவை மைய கட்டிடங்கள்
மக்கள் பயன்படுத்த கட்டப்பட்ட கிராமசேவை மைய கட்டிடங்கள் பூட்டியே கிடப்பதால் அரசு பணம் வீணடிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாணாபுரம்
மக்கள் பயன்படுத்த கட்டப்பட்ட கிராமசேவை மைய கட்டிடங்கள் பூட்டியே கிடப்பதால் அரசு பணம் வீணடிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிராம ஊராட்சிகள்
தண்டராம்பட்டு தாலுகா மற்றும் திருவண்ணாமலை தாலுகா பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், அரசு வழங்கும் திட்டங்கள், விவசாயம் சார்ந்த திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பதற்காக கணினி வசதியுடன் இவை ஏற்படுத்தப்பட்டன.
மேலும் பொதுமக்களைஅழைத்து அவர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்க கூட்டம் நடத்துவதற்கும் இவை வசதியாக அமைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனியாக ரூ.15 லட்சம் மதிப்பில் இவைகள் கட்டப்பட்டன.
சில ஊர்களில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டும் உள்ளது. இந்த கட்டிடம் எதற்காக கட்டினார்கள் ஏன் பயன்படுத்தவில்லை என்பது கேள்வியாகவே உள்ளது.
சமூக விரோத செயல்கள்
சில கிராமங்களில் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் அருகில் கட்டப்படாமல் சம்பந்தமே இல்லாத இடத்தில் கட்டப்பட்டும் இருக்கிறது. சில இடங்களில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் கால்நடைகளை கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் சில இடங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் இந்த கிராம சேவை மைய கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இதனால் என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அந்த நோக்கம் நிைறவேறாமல் இருந்து வருகிறது. அரசின் பணமும் விரயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் ஒவ்வொரு கிராம சேவை மைய கட்டிடத்தின் தொகை ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கட்டிடம் கட்டப்பட்டு அதன் மூலம் எந்த ஒரு பயன்பாடும் எங்களுக்கு இல்லை. மாறாக இந்த கட்டிடத்தில் மாலை நேரங்களில் அவ்வப்போது மது அருந்துவதற்கும் சீட்டு ஆடுவதற்கும்தான் வசதியாக உள்ளது,
அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கு என்று கூறியிருந்தும் ஆனால் அரசு சார்ந்த திட்டங்களை ஒருபோதும் அரசு அலுவலர்களோ ஊராட்சி நிர்வாகிகளோ இதில் பொது மக்களை அழைத்து ஆலோசனைகளோ கருத்தரங்குகளோ நடத்தியதும் இல்லை.
இது தொடர்பாக பொதுமக்கள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.
கணினி பயிற்சி
இந்த கிராம சேவை மைய கட்டிடத்தை மேம்படுத்தி அதில் கணினி உள்ளிட்டவைகளை வைக்கப்பட்டு அதன் மூலம் இப்பகுதிகளில் உள்ள மாணவ, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த கட்டிடத்தை பயன்படுத்த கூறியும் ஊராட்சி நிர்வாகம் அதனை பயன்படுத்துவதில்லை.
மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டம் நடத்துவதற்கும் கருத்தரங்கம் நடத்துவதற்கும் இதனை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கட்டிடத்தை பயன்படுத்தாமல் இருப்பதால் நாட்களுக்கு நாள் சேதம் ஏற்பட்டு வருகிறது என்றனர்.
இனியாவது அரசு நடவடிக்கை மேற்கொண்டு கிராம சேவை மைய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.