தேவூர் அருகே விநாயகர் சிலைகள் வடிவமைத்து அசத்தும் கிராமத்து பெண்கள்


தேவூர் அருகே விநாயகர் சிலைகள் வடிவமைத்து அசத்தும் கிராமத்து பெண்கள்
x

தேவூர் அருகே விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணியில் கிராமத்து பெண்கள் ஈடுபட்டு அசத்துகிறார்கள்.

சேலம்

தேவூர்:

விநாயகர் சிலைகள்

தேவூர் அருகே மோட்டூர் கிராமத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் தொழிலை தங்களது வாழ்வாதாரமாக கொண்டு 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஆண்டு நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு மோட்டூர் கிராமத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில், கைவினை கலைஞர்கள், சிற்பக்கலைஞர்கள், பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மரவள்ளிக்கிழங்கு மாவு, காகிதக்கூழ், கல்நார், பேப்பர் குச்சி, உணவு தானியங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது.

வர்ணம் தீட்டும் பணி

கல்யாண கணபதி, அம்மையப்ப கணபதி, கருடாழ்வார் கணபதி, பாம்பே தாமரை கணபதி, தலைபாகை கணபதி, சிவகிருஷ்ண கணபதி, நாகலிங்க விநாயகர், சின்னக்கணபதி, ராஜகணபதி, மயில் வாகன கணபதி, பாகுபலி சிங்கவாகனம் கணபதி, ஆதி தேச கணபதி, குடும்ப விநாயகர் கிரிக்கெட் கணபதி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வடிவங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வடிவமைத்து வர்ணம் தீட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய முடியாமல் போனது. இதனால் நஷ்டமடைந்த கைவினை கலைஞர்கள் விநாயகர் சிலைகளை குடோனில் அப்படியே அடிக்கி வைத்து விட்டனர்.

பெண்கள் தீவிரம்

இந்த நிலையில் இந்த ஆண்டு அந்த சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கூடுதலாக பல்வேறு புதிய வகை விநாயகர் சிலைகள் ½ அடி முதல் 12 அடி உயரம் வரை தயாரித்து, அதற்கு பல்வேறு வண்ணம் பூசும் பணியில் ைகவினை கலைஞர்கள் மற்றும் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,

இதுகுறித்து மோட்டூர் பகுதியில் விநாயகர் சிலைகள் வடிவமைப்பில் ஈடுபடும் சிற்பி சின்ன சக்தி கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்று மண்ணுக்கும், விண்ணுக்கும் தண்ணீருக்கும் மாசு ஏற்படுத்தாத வகையில் முற்றிலும் இயற்கை ெபாருட்களை கொண்டும், தானிய வகைகளை பயன்படுத்தியும் சிலைகள் தயாரிக்கிறோம், மண்ணுக்கு உரமாக மரவள்ளிக்கிழங்கு மாவையும், தண்ணீரில் உள்ள மீன்களுக்கு இரையாக சிறு தானியங்களையும் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் படித்த பட்டதாரி பெண்கள், வேலையில்லா இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.

அசத்துகிறார்கள்

இதில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயார் செய்து வர்ணம் பூசி விற்பனை செய்து வருகிறோம். குறிப்பாக கிராமப்புற பெண்கள் அதிகளவில் ஆர்வத்துடன் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகள் பல வடிவங்களில் தயாரித்து வர்ணம் தீட்டி அசத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story