ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்த கிராம மக்கள்
தேன்கனிக்கோட்டை அருகே கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்து ஆடு, மாடுகளுடன் உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்து ஆடு, மாடுகளுடன் உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றி 6 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லிக்கற்களை ஏற்றி கொண்டு லாரிகள் கொரட்டகிரி கிராமத்திற்குள் செல்வதால் சாலைகளை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த கிராமத்தின் வழியாக லாரிகள் வந்து செல்லக்கூடாது எனக்கூறி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் தலைமையிலும் சமாதான கூட்டங்கள் நடத்தியும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. தொடர்ந்து இந்த கிராமம் வழியாக டிப்பர் லாரிகள் செல்வதால் புழுதி ஏற்பட்டு மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். லாரிகள் வேகமாக செல்வதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் லாரிகள் செல்வதை அதிகாரிகள் இதுவரை தடுக்காமல் உள்ளதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று தங்களது வீடுகளை காலி செய்து மூட்டை முடிச்சுகளுடன் குழந்தைகள் மற்றும் ஆடு, மாடுகளை அழைத்துக் கொண்டு ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட புறப்பட்டு சென்றனர்.
கொட்டும் மழைையயும் பொருட்படுத்தாமல் ஆடு, மாடுகள், மூட்டை முடிச்சுகளுடன் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நடந்து சென்றனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுப்பிரமணி ஆகியோர் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தள்ளுமுள்ளு
அப்போது போராட்டத்தை கைவிடுமாறு அவா்கள் வலியுறுத்தினர். ஆனால் மக்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் பி.செட்டிப்பள்ளி கிராமத்தில் மக்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய போலீசார் முயன்றனர். இதனால் போலீசாருக்கும், கிராமமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கைது நடவடிக்கையை போலீசார் கைவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கூடிய விரைவில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு ஊருக்கு சென்றனர். கொட்டும் மழையில் ஆடு, மாடுகள், மூட்டை முடிச்சுகளுடன் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.