கயிறு கட்டி மூதாட்டியின் உடலை சுமந்து சென்ற கிராமமக்கள்
சூளகிரி அருகே ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் கயிறு கட்டி மூதாட்டியின் உடலை கிராமமக்கள் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
சூளகிரி:
சூளகிரி அருகே ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் கயிறு கட்டி மூதாட்டியின் உடலை கிராமமக்கள் சுமந்து சென்று அடக்கம் செய்தனர். இந்த பகுதியில் தரைப்பாலம் அமைத்து தரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மூதாட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பீலாளம் கிராமத்தை சேர்ந்த சக்கார்லம்மா (வயது65). இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு குழந்தைகள் யாரும் இல்லை. இதனால் உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர். பின்னர் மூதாட்டியின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்றனர். இந்த பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர்மழையால் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றில் இடுப்பளவு உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கிராமமக்கள் ஆற்றின் இருபுறங்களிலும் கயிறு கட்டி, அதை பிடித்துக்கொண்டு மூதாட்டின் உடலை சுமந்து சென்றனர்.
தரைப்பாலம்
மேலும், இறுதி சடங்கில் பங்கேற்ற பெண்களும் கயிறு பிடித்துக்கொண்டு ஆற்றை கடந்து சென்றனர். பின்னர் கிராமமக்கள் மூதாட்டியின் உடலை மயானத்தில் அடக்கம் செய்தனர். மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், இது போன்ற அவலநிலை தொடர்ந்து வருகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.