குடிநீர் கேட்டு கொட்டும் மழையில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு
குடிநீர் கேட்டு கொட்டுமழையில் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழையம்பட்டு கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு குடிநீர் வினியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த, மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்ததால், சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.
இதையடுத்து, புதிதாக ரூ.23 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால்,இதற்கான இடத்தை தேர்வு செய்து கட்டுமான பணியை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் நீடித்து வருகிறது.
இதன்காரணமாக, கிராமத்தில் குடிநீர் பிரச்சினை தீர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
முற்றுகை
நேற்றுகாலை, கிராமத்து மக்கள் காலி குடங்களுடன் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையில் நனைந்தபடி, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கர தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபேக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில்,
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.