விழா கமிட்டிதான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக்கோரி அவனியாபுரத்தில் கிராம மக்கள் போராட்டம்
விழா கமிட்டிதான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக்கோரி அவனியாபுரத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழா கமிட்டிதான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக்கோரி அவனியாபுரத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகை அன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதற்கு மறுநாள் பாலமேடு, அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும். இந்த 3 ஜல்லிக்கட்டு விழாக்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்த ஜல்லிக்கட்டுகள், பாரம்பரிய வழக்கப்படி அந்தந்த கிராம மக்கள் சார்பில் அமைக்கப்படும் கமிட்டிகள் மூலம் நடைபெறுகின்றன. ஆனால் சில ஆண்டுகளாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கிராம மக்களிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
அதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரடியாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
போராட்டம்
இந்த நிலையில், கமிட்டிதான் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் எனக்கோரி அவனியாபுரம் பஸ் நிலைய பகுதியில் கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கமிட்டியை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேசினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்றால், கிராம கமிட்டியினர் தலைமையில்தான் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அலங்காநல்லூர், பாலமேடு போன்று, அவனியாபுரத்திலும் கிராம கமிட்டி தான் விழாவை நடத்த வேண்டும். தனி நபருக்கு மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்கும் வகையில் செயல்படுகிறது. எங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் கேட்க மறுக்கிறது. எனவே, கிராம பொது கமிட்டியினருக்கு, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைப்பு மட்டுமே செய்ய வேண்டும். முழுமையாக அவர்களே நடத்த முயற்சிப்பதை ஏற்க முடியாது" என்றனர்.