திட்டக்குடி அருகே ரேஷனில் பொருட்கள் வழங்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
திட்டக்குடி அருகே ரேஷனில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த 278 குடும்ப அட்டைதாரர்களுக்கு அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்களிடம், கடை ஊழியர்கள் சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய்க்கு பணம் பெற்றுக்கொண்டதுடன், ரேஷன் கார்டை பதிவு செய்துள்ளனர். ஆனால் பொருட்களை வழங்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து நேற்றும் கிராம மக்கள் பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். ஆனால் கடை ஊழியர்கள் பொருட்கள் இல்லை என்று கூறி உள்ளனர்.
போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அத்தியாவசிய பொருட்களை உடனடியாக வழங்கக்கோாி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் நடராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அத்தியாவசிய பொருட்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாாிகள் தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.