15 நாட்களாக குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதி


15 நாட்களாக குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு

கீழ்வேளூர் ஒன்றியம் வடகரை, கோகூர், ஆனைமங்கலம் ஊராட்சிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாடம் குடிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீரை நம்பியே உள்ளனர்.

இந்த 3 ஊராட்சிகளுக்கும் திருமருகல் பகுதியில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வரும் குடிநீர் ஆனைமங்கலம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தேக்க தொட்டியில் சேமிக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்த 3 ஊராட்சிகளுக்கு சரிவர குடிநீர் வராததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்கள் வேதனை

இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேற்கண்ட 3 ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story