கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து பெரியார்நகர் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு 300 குடும்பத்தினர் 10 வருடங்களாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் 150 குடும்பங்களுக்கு வீட்டு வரியும், மின் இணைப்பு வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 150 குடும்பங்களுக்கு வீட்டு வரி ரசீது வேண்டி சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவரிடம் 6 மாதமாக முறையிட்டும், இதுநாள் வரை வீட்டு வரி வசூலிக்கப்படவில்லை.
எனவே 150 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வசதி, குடிநீர் இணைப்பு வசதி போன்ற அடிப்படை வசதி செய்து தரக்கோரி இந்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கரும்பன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.